யார் இந்த பாண்டியர்கள்...
பாண்டியர்கள்
பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இருவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை,இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.பாண்டியர்களை முற்காலப் பாண்டியர்கள், கடைச்சங்ககாலப் பாண்டியர்கள், இடைக்காலப் பாண்டியர்கள் ,பிற்காலப் பாண்டியர்கள் ,தென்காசிப் பாண்டியர்கள் என வகைப்படுத்தலாம். பாண்டியதேசம் சோழதேசத்திற்குத் தெற்கிலும்,சேரதேசத்திற்குக் கிழக்கிலும்,ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும்.இந்த பாண்டிய தேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும்,கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும்,பள்ளமுமாகக் காணப்படும். இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு,சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு,சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கில் மலையம்,தர்துரம்,என்னும் பெரிய மலைகளும், வருடகிரி,வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும்.இந்த கருநாடக தேசத்தில் யதுகிரி,செகயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதி பாண்டிய தேசத்தை செழிக்க வைக்கின்றது.தெற்கில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் வைகை நதி சிறப்பு வாய்ந்தது.இந்த பாண்டிய தேசத்தில் நெல், வாழை, கரும்பு,போன்ற பயிர்களும், பருத்தி,பயறுவகைகளும் விளைகின்றன.காவிரிநதிக் கரையில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை,இராமேசுவரம் சிறப்பு வாய்ந்தவை. தொன்மங்களில் பாண்டியர்கள் குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.இந்தியப்பெருங்கடலில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது.பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது. இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது. இராமாயணத்தில்
பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.
புராணங்களில்
பல இந்து மதப்புராணங்களும்,தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாகப் பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களும்,நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும், இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரையில் 197 பாண்டியர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி,இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது.சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள்.அதன் வழிவந்த வழிமுறையினரே மௌரியர்கள் என்று கருதப்படுகிறது.அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக